ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி மற்றும் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “இந்தப் படத்தை பண்ண முக்கியமான காரணங்கள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்று. சின்ன வயதில் இருந்தே போலீஸ் உடையை பார்த்து பார்த்து வளர்ந்த பையன் நான். கலர் வேண்டுமானால் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் பொறுப்பு ஒன்னுதான். இந்தப் படக் கதை கேட்ட பிறகு என் அப்பாவுக்கும் முகுந்துக்கும் சில விஷயங்கள் ஒத்துபோவதை பார்த்தேன். படம் வெளியான பிறகு எந்தந்த இடம் என்று சொல்கிறேன். இன்னொரு காரணம் கமல் சார் பார்ப்பார் என்பது. அதைத் தாண்டி உண்மையான இராணுவ வீரர்கள் பார்ப்பார்கள். இது எல்லாமே என் எண்ணத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. படப்பிடிப்பு முடிந்தும் கூட அந்த ஒழுக்கம் ஒட்டி கொண்டது.
இந்தப் படம் நடிக்க ஒத்துக் கொண்ட போதே சும்மா போய் நடிச்சுட்டு வர படம் இது கிடையாது என தெரிந்துவிட்டது. முதல் நாளில் முதல் ஷாட் யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு நடித்து முடித்தவுடன் ரொம்ப கெத்தாக உணர்ந்தேன். நிஜ லொகேஷனில் படப்பிடிப்பு நடந்தது. டீசரில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி படமாக்கப் பட்டு முடிந்தவுடன், அங்கிருந்த நிஜ இராணுவ வீரர்கள் கூஸ்பம்ஸ் வருவதாக பாராட்டினார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது நம்முடைய உழைப்பு-லாம் ஒன்னுமே இல்லை எனத் தோன்றுகிறது.
நான் முதலில் முதலில் முகுந்த வரதராஜனின் மனைவி மற்றும் குழந்தையை பார்க்கும் போது அதிகம் பேசவில்லை. அவர்களை பார்க்கும் போது என் அம்மாவையும் அக்காவையும் பார்ப்பது போல் இருந்தது. என்னுடைய அப்பாவும் பணியில் இருக்கும் போதுதான் இறந்து போனார். போருக்கு போகவில்லை. சண்டையும் போடவில்லை. பணிச்சுமை காரணமாக மறைந்தார். திடீரென வந்து உனக்கு இனி அப்பா இல்லை என சொன்னார்கள். அதன் பிறகு நான் அம்மா, அக்கா என வாழ்க்கை மாறியது. எனது அப்பா இறக்கும்போது அவருக்கு 50 வயது. ஆனால் முகுந்த் இறக்கும் போது அவருக்கு கிட்டதட்ட 30வயது தான். எல்லா கஷ்டத்தையும் சமாளித்து விடலாம். ஆனால் அப்பா இல்லை என்பதை சமாளிப்பது ரொம்ப கஷ்டம். முகுந்த் இல்லாமல் இந்து ரொம்ப தைரியமாக இருக்கிறார். அதை அவரிடம் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தை என் அம்மாவுக்கும் அக்காவுக்கும் காட்ட காத்திருக்கிறேன்” என்றார்.