சென்னை ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருபவர்கள் கிருபாகரன் (20) மற்றும் நிதிஷ் (16). இவர்கள் பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் தங்களை தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் பாடகர் மனோ மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹீர் உள்ளிட்ட சிலரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விக்னேஷ், தர்மா ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து மனோவின் மனைவி ஜமீலா, சம்பவத்தன்று என் மகன்களுடன் சாலையில் நடந்து போகும்போது முகம் தெரியாத இருவர் தங்களை தெலுங்கு கொல்டி சினிமாகாரர்கள் என கிண்டலடித்ததாகவும் அதை தட்டி கேட்ட தனது மகன்களை அந்த கும்பல் ஆட்களை திரட்டிக் கொண்டு என் மகன்களை தாக்கியதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் காயம் காரணமாக மருத்துவமனை சென்ற மகன்கள் தலைமறைவானதாக அவதூறு பரப்பிவிட்டனர் என்றும் இந்த அவமானத்தால் அவர்கள் வீட்டிற்கே வரவில்லை என்றும் பேசியிருந்தார். இதனிடையே ஒரு கும்பல் ரஃபீக் மற்றும் சாஹீரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சிறார்களை தாக்கியதாக மனோ மகன்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த அவர், 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ரஃபீக் மற்றும் சாஹீர் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.