Skip to main content

"50 வருஷத்துக்கு முன்னால பிறந்திருந்தா சிவாஜி படத்துல பாடியிருப்பேன்..." கலகலக்கும் பாடகர் ஜெகதீஷ் குமார்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Jagadeesh Kumar

 

முன்பெல்லாம் ஒரு பாடல் வெற்றிபெறுகிறதா இல்லையா என்பதற்கான அளவுகோல், அப்பாடல் திருவிழாக்கள், திருமணங்கள், டவுன் பஸ்கள் உள்ளிட்ட இடங்களில் ஒலிக்கின்றனவா என்பதுதான். இப்போது, யூ-ட்யூபில் மில்லியன் வியூஸ் பெற வேண்டும், ம்யூசிக் ஆப்களில் ட்ரெண்டாக வேண்டும்... இன்னும் பல இருக்கின்றன. வாய்ப்புகளும் அதே நேரம் போட்டியும் பன்மடங்கு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் ஒரு பாடகராக நிலைத்திருப்பது பெரும் சவால். அதை எப்படிச் செய்கிறார் என்று சமீபத்திய புலிக்குத்தி பாண்டி 'யம்மாடியம்மா' உட்பட பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள  பாடகர்  ஜெகதீஷ் குமாருடன் பேசினோம்.

 

உங்களைப் பற்றி...?

 

என் சொந்த ஊர் காஞ்சிபுரம். அப்பா பால்ராஜ், அம்மா வசந்தி. பிறந்தது காஞ்சிபுரமா இருந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னைதான். லயோலால விஸ்காம் படிச்சேன். இசைத்துறைல சாதிக்கணும் என்பதுதான் என் ஆசை. 11-ஆம் வகுப்பு படிக்கும்போது இருந்தே லைட் மியூசிக்ல பாடிக்கிட்டு இருக்கேன். அதன்பிறகு சினிமால வாய்ப்புத் தேட ஆரம்பிச்சேன். ஜீவன் மயில் சார் முதல்முறையாக ஜிங்கிள் பாட வாய்ப்புக் கொடுத்தார். சினிமால 'மிஸ்டர் பெல்லி கொடுகு'தான் என்னுடைய முதல் படம். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் அறிமுகமாகிவிட்டேன். தமிழில் முதல் படம் மிர்ச்சி சிவா நடித்த 'சொன்னா புரியாது'. அங்க ஆரம்பிச்சப் பயணம் இன்னைக்கு இங்க வரைத் தொடருது.

 

உங்களுக்கென ஒரு அடையாளம் உருவாக்கித் தந்த பாடல் எது?

 

தமிழில் என் முதல் பாடலான 'கேளு மவனே கேளு' பாடலே எனக்கு நல்லப் பெயர் வாங்கிக்கொடுத்தது. அந்த பாடல் எஃப்எம்ல பெரிய ஹிட். ‘கொடி வீரன்’ல பாடுன 'ஐயோ அடி ஆத்தே' பாடல் பட்டிதொட்டியங்கும் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. இப்ப,  'யம்மாடியம்மா' பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

பாடகர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் கடும் போட்டி நிறைந்த சூழல் நிலவுகிறது. இதற்குள் தொடர்ந்து உங்களை எப்படி நிலைநாட்டிக்கொள்கிறீர்கள்?

 

நான் யாரையும் போட்டியாளராகப் பார்ப்பதில்லை. இத்துறையில் உள்ள அனைவரையும் நண்பர்களாகவும் குடும்ப உறுப்பினர்களாகவுமே பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை போட்டி என்பது எல்லா இடங்களிலும் இருக்கும். சாலையில் நாம் போகும்போது கூட நமக்கு இணையாக ஒருவர் பயணித்துக்கொண்டு இருப்பார். இருவரும் சென்றடைய வேண்டிய இடம் வேறாக இருக்கும். அவரவர் பாதையை நோக்கிப் பயணித்தால் சென்றடைய வேண்டிய இடத்தை இருவரும் எட்டலாம். போட்டி நிலவுவது ஆரோக்கியமான சூழல்தான்.

 

இயக்குநர் முத்தையா படங்களில் நீங்கள் பாடியுள்ள இரு பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. அது பற்றி?

 

இது எதிர்பாராத ஒன்றுதான். 'கொடி வீரன்'ல சும்மா ட்ராக் பாடத்தான் ரகுநந்தன் சார் என்னைக் கூப்பிட்டார். அது முத்தையா சாருக்கும் பிடிச்சுப்போக, என்னையே பாடச் சொல்லிட்டார். எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். இவையெல்லாம் கடவுள் கருணையால் நடந்ததுன்னு நினைக்கிறேன்.

 

நீங்கள்தான் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறீர்கள் என்று தெரியாமல் உங்கள் முன் யாரவது உங்கள் பாடலைப் பாடிக் கேட்டதுண்டா? அது மாதிரியான ஏதாவது செலிபிரிட்டி மொமெண்ட்ஸ்?

 

நான் பைக் அதிகமா யூஸ் பண்ண மாட்டேன். எங்க போனாலும் பஸ் அல்லது ட்ரைன்லதான் போவேன். 'காஞ்சனா 2' வெளியான சமயத்துல 'அர்சலே உர்சலே' பாட்டை சிலர் கேட்குறதப் பார்த்திருக்கேன். ஷாப்பிங் மாலில் உள்ள ஷோரூம்ல சில நேரம் ஓடிக்கிட்டு இருக்கும். அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கும். ஏதாவது டீவி, எஃப்எம்ல ஓடுச்சுனா என் நண்பர்கள் ஃபோன் பண்ணி சொல்லுவாங்க.

 

லாக்டவுன் சமயத்துல இசை, கச்சேரினு சோசியல் மீடியால பயங்கர பிசியா இருந்தீங்களே... அதற்கான காரணம்?

 

உண்மையைச் சொல்லனும்னா லாக்டவுன் போட்ட முதல் ரெண்டு நாள் எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இப்படி ஒரு சூழலை இதுவரை எதிர்கொண்டதேயில்லை. அதன்பிறகு, நம்மள மாதிரி மத்தவங்களும் பயந்துகிட்டு இருப்பாங்களோனு யோசிச்சேன். நான் நினைச்சது சரிதான். நிறைய பேர்கிட்ட இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பயம் இருந்தது. அதைச் சரி செய்ய நம்மால் முடிந்த ஒன்றைச் செய்யலாம்னு முடிவெடுத்து பண்ணதுதான் அது. கரோனா பீதியில் இருந்து மக்களைத் திசை திருப்பி எந்த நெகட்டிவ் தாட்ஸும் அவங்களுக்கு வராத மாதிரி பார்த்துக்கொள்வதுதான் அந்த முயற்சியின் நோக்கம்.

 

பாடகர்கள் மீது பெண்களுக்கு அதிக க்ரஷ் இருக்கும். அந்த மாதிரி உங்க லைஃப்ல ஏதாவது?

 

நான் வீட்டுக்கு ஒரே பையன். அப்பா, அம்மாவோட முழு சம்மதத்தில் கல்யாணம் முடிக்கணும்னு நினைக்கிறேன். சில ப்ரப்போசல்ஸ் வந்திருக்கு... எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வந்ததால் அதில் நடைமுறைச் சாத்தியம் இல்லை.

 

இத்தனையாண்டு காலத் திரைத்துறைப் பயணத்தில் நெகிழ்வான ஒரு தருணம்?

 

என் அப்பா சிவாஜி கணேசன் சாரோட பெரிய ரசிகர். நானும் சின்ன வயசில் இருந்தே சிவாஜி சாரோட தீவிர ரசிகர். ஒரு 50 வருஷத்திற்கு முன்னாடி பிறந்திருந்தா அவர் படத்துல பாடியிருப்பேன். இப்ப, அவர் குடும்பத்தில் இருந்து வந்த விக்ரம் பிரபு படத்துல பாடுனது மனநிறைவைத் தந்தது. ரொம்ப நெகிழ்ச்சியான தருணமாகவும் அது இருந்தது.

 

சார்ந்த செய்திகள்