Skip to main content

“இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன்” - அந்தோணி தாசன் பேச்சு

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
singer anthony dasan to direct a film

குளோப் நெக்சஸ் நிறுவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மட்டும் இன்றி திரைப்படங்களிலும் அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். நடிப்பு, நடனம், பாட்டு பாடுவது என எந்த திறமையாக இருந்தாலும் அதை 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவாக  தயாரித்து பதிவேற்றம் செய்யலாம். நடனத்தில் தனி ஒருவர் நடனம் ஆடுவது மட்டும் இன்றி, குழுவாக நடனம் ஆடும் வீடியோவும் பதிவேற்றம் செய்யலாம். குழு நடனம் என்றால் ஒரு குழுவில் 3 பேர் முதல் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 24 பேர்கள் பங்கேற்கும் இறுதிப் போட்டி பிரம்மாண்டமான முறையில்,  தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும். 

நடிப்பு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிக்கவும், இசை திறமையுள்ளவர்களுக்கு பாடகர், இசைக் கலைஞர், நடனத்தில் திறமையுள்ளவர்களுக்கு நடனம் என பல வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ மற்றும் பட தலைப்பு ஆகியவை ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ஆண்டனி தாசன் இயக்குகிறார். மற்றொரு படத்தை சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களை குளோப் நெக்சஸ் நிறுவனம் பிரபலப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதியாகும். இறுதிப் போட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க பொது பிரிவு வயது வரம்பாக 3 முதல் 45 என நிர்ணயம் செய்துள்ளோம். அதேபோல், டீன் என்ற பிரிவுக்கு 13 முதல் 19 வயதும், சீனியர் என்ற பிரிவுக்கு 20 முதல் 45 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான வயது வரம்பாக 3 முதல் 12 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக தனிப்பட்டவர்களுக்கு ரூ.299 வசூலிக்கப்படுகிறது. குழுவாக நடனம் ஆடுபவர்களுக்கு குழு கட்டணமாக ரூ.1499 வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அந்தோணி தாசன் பேசுகையில், “மிகவும் சந்தோஷாமா இருக்கு, குளோப் நெக்சஸ் நிறுவனம் எடுக்கும் இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன். சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன், ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குநர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்