90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் கதையை மையமாக வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்படத்தை பாராட்டி ப்ரொமோட் செய்து வந்தனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி பாராட்டிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களிடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி இப்படத்தை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிடத் தடை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.