தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான சில்க் ஸ்மிதா, மண்ணை விட்டு மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். இவரது வாழ்க்கையை தழுவி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ‘தி டர்டி பிக்சர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் சில்க் ஸ்மிதாவாக சந்திரிகா ரவி நடித்து வருகிறார்.
தமிழில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷ்ணு பிரியா காந்தி என்பவர் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். இவர் வரும் காட்சிகளில் பெரிய நடிகர்களுக்கு எழும் விசில் சத்தத்திற்கு ஈடாக வரவேற்பு கிடைத்திருந்தது. தெலுங்கில் கடந்தாண்டு வெளியான நானியின் ‘தசரா’ படத்திலும் சில்ஸ் ஸ்மிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தனர். இதுபோல தொடர்ந்து சில்க் ஸ்மிதாவை பற்றி அவ்வப்போது திரையுலகம் நினைவுபடுத்திக் கொண்டேதான் வருகிறது.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் நினைவுநாளான இன்று(23.09.2024) ஈரோட்டை சேர்ந்த அவரின் தீவிர ரசிகரான டீ கடை வியாபாரி ஒருவர், தனது கடை முழுவதும் அலங்கரித்து வைத்துள்ள சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதோடு ஆதரவற்ற 25 பேருக்கு உணவு வழங்கி உதவியுள்ளார். இவரது செயல் அங்குள்ள பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.