தமிழக அரசு விருது வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் வெளியான திரைப்படங்கள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் என 314 பேருக்கு விருதுகள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
.
நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதனிடையே நடிகர் சித்தார்த் 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காவியத் தலைவன் படத்திற்காக பெற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சித்தார்த், "8 வருடம் கழித்து எங்களின் உழைப்பிற்கும் பார்த்த கனவுகளுக்கும் சேர்ந்து அனுபவித்த கலைக்கும் இந்த மாதிரி ஒரு விருது கிடைத்திருக்கு. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. காவியத்தலைவன் படக்குழுவிற்கு நன்றி.
ஒரு அரசாங்கத்திடம் சிறந்த நடிகருக்கான விருது வாங்குவது என்பது மிக பெரிய விஷயம். அதுவும் 8 ஆண்டுகள் கழித்து வாங்குவது அதிசயம் மட்டுமின்றி அற்புதமும் கூட. இந்த அற்புதத்திற்கு நன்றி"என பேசினார். பின்பு வெளியேறிய சித்தார்த்திடம் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது லிஃப்ட்டுக்குள் சென்ற சித்தார்த்திடம் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டார் சித்தார்த். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.