ராஜஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேடையில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இது சர்ச்சையாகி அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் நடிகர் ரிச்சர்ட் கெரே மீது ஐபிசி 292, 293, 294 என பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஷில்பா ஷெட்டியின் கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஷில்பா ஷெட்டி மீது எந்த தவறும் இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்து அவரை விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து போலீசார் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மறுஆய்வு மனு செய்தனர். இதற்கு நடிகை ஷில்பா ஷெட்டி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஹாலிவுட் நடிகர் முத்தமிடும்போது தான் தடுக்கவில்லை என்பதுதான் தன் மீதான ஒரே குற்றச்சாட்டு. இதை குற்றம் செய்தவராகக் கருத முடியாது" எனக் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கானது செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நடிகை ஷில்பா ஷெட்டியை விடுதலை செய்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.