தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதற்கு நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புரமோஷனில் ஈடுபட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தனுஷுடனான கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ளார் அதில்...
"கடந்த நான்கு மாதங்களாக, இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தொடர்பாக நான் எந்தவித கருத்தும் சொன்னதில்லை. எதிர்மறையாக இல்லாமல், நாம் தயாரித்துள்ள படம் உலக அளவில் போகப் போகிறது என்பதில் மட்டுமே இருக்கிறேன். நானும் தனுஷும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இந்தப் பட விவகாரத்தில் எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மையே. தனுஷும் இந்தப் படத்தின் நல்லதுக்குத்தான் பேசினார். 'ஜகமே தந்திரம்' தியேட்டரில் ரிலீசானால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது சரியான கருத்துதான். ஆனால், கமர்ஷியல் ரீதியாக கடந்த ஓராண்டாக இத்தகைய பெரிய பட்ஜெட் படத்தை வைத்துக்கொண்டிருப்பதால் எவ்வளவு வட்டி கூடும் என்பது எனக்குத்தான் தெரியும். இது தொடர்பாக நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தற்போது இந்தப் படம் உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அமெரிக்காவில் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக அது எனக்கு சந்தோஷத்தை தருகிறது" என விளக்கம் அளித்துள்ளார்.