Skip to main content

“இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும்போது தித்திக்குமா எனத் தெரியவில்லை” - ஷங்கர்

Published on 26/08/2024 | Edited on 26/08/2024
shankar about mari selvaraj vaazhai

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமாக கடந்த 23ஆம் தேதி வெளியான படம் வாழை. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ளனர். 

இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினரைப் பாராட்டினர். இதையடுத்து சிறப்பு காட்சியை பார்த்த பாலா மனமுடைந்து மாரி செல்வராஜை கட்டியனைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தனுஷ், பா.ரஞ்சித், கார்த்தி, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, ஹிப்ஹாப் ஆதி எனப் பல்வேறு பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக படக்குழுவை பாராட்டினர். 

திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன் எம்.பி, சீமான் ஆகியோரும் படக்குழுவினரைப் பாராட்டினர். இதில் திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் ஷங்கர் தற்போது இப்படத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “வாழை என்னை உலுக்கிவிட்டது. அதன் தாக்கம் பலமாக இருக்கிறது. இன்னமும் என்னால் வெளியிவர முடியவில்லை. படம் பார்க்கும் போது, அவர்கள் தூக்கிக் கொண்டு போகிற வாழை நமக்கு வலியைக் கொடுக்கிறது. இனிமேல் வாழைப்பழம் பார்க்கும் போது இவர்கள் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். அப்போது அந்த பழம் தித்திக்குமா என்று கூட தெரியவில்லை. இயல்பான கதாபாத்திரங்கள். குறிப்பாக அந்த இரண்டு பசங்க.  ஒரு யதார்த்தமான சினிமாவில் ஒரு அழகியல், நகைச்சுவை, ஸ்டைல் என எல்லாமே இருக்கிறது. மாரி செல்வராஜ் ரொம்ப நல்லா பண்ணியிருக்கிறார். அவருடைய ரியல் ஸ்டோரின்னு சொன்னார். மியூசிக், கேமரா என அனைத்துமே நலலாயிருந்தது” என்றார். 

சார்ந்த செய்திகள்