கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதையடுத்து விரைவில் நடக்கவிருக்கும் யுரோப்பியன் ரேஸிங்கில் அஜித் பங்கேற்கவுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய அணியை அஜித் உருவாக்கி அதன் சார்பில் ஐரோப்பியா சீரிஸ் பந்தயத்தில் ஒருவரை களமிறக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பைக் பயணத்தின் போது, “'மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மைதான்” என பேசியிருந்த வீடியோ வெளியாகி வைரலானது. பின்பு அஜித் நிறுவனம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில் அஜித் மீண்டும் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக அஜித்தின் மனைவி ஷாலினி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மீண்டும் உங்களை ரேஸராக பார்ப்பது மகிழ்ச்சி. நீங்கள் விரும்பியதை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அணி பாதுகாப்பாக மற்றும் வெற்றிகரமாக பயணிக்க வாழ்த்துகள்” என்றார். அண்மையில் அஜித்துடன் ஸ்பெயின் நாட்டில் சாலையோரம் நடக்கும் வீடியோவை ஷாலினி பகிர்ந்திருந்த நிலையில் அது வைரலானது குறிப்பிடத்தக்கது.