சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில், அவருடைய படங்களின் தலைப்பில் ஒரு தனித்தன்மை தெரிகிறதே, அதற்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சீனு ராமசாமி, “தலைப்பு என்பது ஒரு படத்திற்கான திலகம். பெண்ணின் முகத்தை அழகாகக் காட்ட குங்குமத்தை வைப்போம் அல்லவா, அது போலத்தான் படத்திற்கான தலைப்பும். இதில் முத்தமிழறிஞர் கலைஞர்தான் எனக்கு முன்னோடி. அவர் பராசக்தி என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தார். அந்தப் படம் பராசக்தியை பற்றியதோ, பக்தியைப் பற்றியதோ அல்ல. அது ஒரு பகுத்தறிவு படம். சரியான வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பர்மா அகதியைப் பற்றிய கதைதான் பராசக்தி. அப்படி இருக்கையில் படத்திற்கு ஏன் பராசக்தி என்று பெயர் வைத்தார்?
பகுத்தறிவு சம்மந்தப்பட்ட தலைப்பு வைத்தால் பக்தர்கள் நம் படத்தை பார்க்காமல் போய்விடுவார்கள் என்று நினைத்து பராசக்தி எனப் பெயர் வைத்தார். அதன் மூலம், பெரிய அளவிலான கூட்டத்தை படம் பார்க்க வரவைத்து, அவர் சொல்ல நினைத்த கருத்தைச் சொன்னார். இதை முன்பு ஒரு பேட்டியில்கூட கூறியிருந்தேன்.
அந்தப் பேட்டி வந்த பேப்பரை எடுத்துச் சென்று சண்முகநாதன் ஐயாவிடம் கொடுத்து இதை கலைஞர் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறினேன். அதன் பிறகு, ஒருநாள் சண்முகநாதன் ஐயா போன் செய்து தலைவர் உங்க பேட்டியை பார்த்துவிட்டார், ரொம்ப சந்தோசம் என்று சொன்னார். இதைக் குறிப்பிட்டு முரசொலியில் எழுதினால் அவருடைய தொழிலுக்கு தொந்தரவாக அமைந்துவிடும். அதனால் நேரம் வரும்போது இதைக் குறிப்பிடுகிறேன் என்று கலைஞர் சொன்னதாக தெரிவித்தார். அதை என்னால் மறக்க முடியாது. எனவே வித்தியாசமான தலைப்புகள் வைப்பதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷன் கலைஞர்தான்” எனத் தெரிவித்தார்.