சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில், அவருடைய படங்களில் கதாநாயகிகள் மிகக்கண்ணியமாக காட்சிப்படுத்தப்படுவதற்கான காரணத்தை தர்மதுரை பட உதாரணத்துடன் கேட்டோம். அந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
”தேவையே கண்டுபிடிப்பின் தாய். என்னுடைய கதையில் அப்படி ஒரு தேவை இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு அதற்கு நியாயம் செய்தது தமன்னாவின் திறமைதான். தர்மதுரையில் பேர் அண்ட் லவ்லி மட்டும் போட்டுக்கொண்டு தமன்னா நடித்தார். பொதுவாக தமன்னாவுடன் மேக்கப், ஹேர் ட்ரஸ்ஸிங், ட்ரைனர், சமைக்க என 10 பேர் வரை வருவார்கள். என்னுடைய ஷூட்டிங்கிற்கு வந்த உடனேயே அவர்களுக்கு வேலை இல்லை என்று சொல்லிவிடுவேன். அதனால் அவர்களுக்கு என்னை பிடிக்காது. தர்மதுரை படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் எனக்கு விஷுவல்ஸ் காமிக்கிறீங்களா என்று தமன்னாவே கேட்டுவிட்டார். விஷுவல்ஸ் காட்டிய பிறகுதான் அவருக்கு திருப்தியே வந்தது. அதன் பிறகு, மேக்கப் இல்லாமலும் அழகாதானே இருக்கீங்க, ரோஜா ரோஜாவாக இருப்பதுதான் அழகு என்று அவரிடம் கூறினேன்.
முன்பு இருந்ததைவிட சினிமாத்துறை இப்போது மாறிவிட்டது. நடிகையின் திறமைதான் இப்போது பார்க்கப்படுகிறதே ஒழிய நிறமல்ல. மாமனிதன் படத்தில் நடித்த காயத்ரிதான் என்னுடைய இடிமுழக்கம் படத்திலும் ஹீரோயின். அவர் மாதிரியான நம்மூர் நடிகைகளுடன் பயணிக்கத்தான் நான் ஆசைப்படுகிறேன். தர்மதுரை படத்தில் கதாநாயகி தெலுங்கு பேசக்கூடிய பெண் என்பதால் அந்தப் படத்தில் வெள்ளையாக இருக்கும் தமன்னாவை நடிக்க வைத்தேன். அதேபோல, கண்ணே கலைமானே படத்தில் மதுரையில் வசிக்கும் சவுராஷ்டிரா பெண்ணாக தமன்னா நடித்திருப்பார். கதாபாத்திரத்தின் தன்மையை மீறி அதை நாம் செய்வதில்லை. கதைப்படங்களை மக்கள் தொடர்ந்து ஆதரித்தால் இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்”.