லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையொட்டி முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டு பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையானது. அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடக்காததால் ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை படத்தின் ட்ரைலர் வெளியானது. பல்வேறு இடங்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், திரையரங்கின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே ட்ரைலர், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ட்ரைலரில் விஜய் பேசும் வசனம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்கக் கோரி படக்குழுவிற்கு எதிராக இந்து மக்கள் கழகம் சார்பிலும் அகில பாரத் இந்து மகா சபா சார்பிலும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னோட்டத்தில் இருக்கும். தணிக்கையில் அதை மியூட் செய்துவிடுவார்கள். ஒரு படத்தை இயல்பாக எடுக்கும் பொழுது மக்கள் மொழியில் வந்துவிடுகிறது. என் தம்பி வெற்றிமாறன் எடுத்த வடசென்னையில் வந்தது எங்கள் மொழிதான். அதை விட்டுவிட்டு வாருங்கள், அமருங்கள், உட்காருங்கள்... என இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது.
வெப் சீரிஸில் இதைவிட கேவலமான வார்த்தைகள் ரொம்ப கொச்சையாக பேசக்கூடிய வார்த்தைகள் வருகிறது. விஜய் சிகரெட் பிடிப்பதனால் எல்லாரும் பிடிக்கிறார்கள், அவர் சாராயம் குடிக்கிறதனால் எல்லாரும் குடிக்கிறார்கள் எனக் கருத வேண்டியதில்லை. சமூகம் எப்படி கருதுகிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும்." என்றார்.