Skip to main content

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
gesgs

 

ஜெயம் ரவி, நிதி அகர்வால் இணைந்து நடித்து, இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் பொங்கலன்று வெளிவந்துள்ள படம் 'பூமி'. ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில், 'உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் தம்பி ஜெயம் ரவி நடிப்பில் உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள 'பூமி' திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மண்ணுக்கும், மக்களுக்குமான தற்கால அரசியலைப் பேசும் 'பூமி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என கருத்து தெரிவித்து அறிக்கை அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில்...

 

"தற்சார்பு பொருளாதாரத்தை ஒழித்து, பாரம்பரிய இயற்கை வேளாண்மையை அழித்து, விதைகளை மரபணு மாற்றம்‌ செய்து, அவற்றை விளைவிக்க இரசாயன உரங்கள்‌ பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்து, மண்ணை மலடாக்கி, நிலத்தடி நீர்மட்டம்‌ குறையச்செய்து, உணவை நஞ்சாக்கி, கொடிய நோய்களைப்‌ பரப்பி அதற்கான மருந்துகளை உற்பத்தி செய்ய நச்சுக்கழிவுகளை வெளியேற்றும்‌ தொழிற்சாலைகளையும்‌ நிறுவி, நாட்டை சந்தையாக்கி, ஆட்சியாளர்களை தரகர்களாக்கி, வளர்ச்சி என்ற பெயரில்‌ நாட்டின்‌ நிலவளம்‌, நீர்‌ வளம்‌, கனிம வளத்தைச்‌ சுரண்டி, மக்களை நுகர்வு மந்தைகளாக்கி நிறுத்தியிருக்கும்‌ உள்நாட்டு, வெளிநாட்டு பெரு முதலாளிகளின்‌ வளவேட்டை அரசியலை தோலுரிக்கும்‌ கதையைக்‌ களமாக்கி மறைநீர்‌ பொருளாதாரம்‌, ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்‌ பண்ணைகளின்‌ பயன்பாடு, வேளாண்மை அரசுத்தொழிலாக இருக்கவேண்டியதன்‌ அவசியம்‌, உணவை நஞ்சாக்கும்‌ மரபணு மாற்றப்பட்ட விதைகள்‌, இரசாயன உரங்கள்‌ மற்றும்‌ பூச்சிக்கொல்லிகள்‌ மூலம்‌ ஏற்படும்‌ விளைவுகள்‌, பாரம்பரிய விதைகள்‌ மீட்பு, தமிழர்‌ ஒர்மைக்கான தேவைகள்‌ குறித்து எளிய மக்களுக்கும்‌ புரிந்திடும்‌ வகையில்‌ திரைக்கதை அமைத்து கருத்துச்‌ செறிவுமிக்க உரையாடல்களோடு உயிரோட்டமான காட்சியமைப்புகள்‌ என வீதிதோறும்‌ மேடையில்‌ நாம்‌ விதைத்த விதைகள்‌ இன்று வெள்ளித்திரையில்‌ 'பூமி' திரைப்படமாக முளைத்துள்ளது பெரும்‌ நம்பிக்கையையும்‌, மட்டற்ற மகிழ்ச்சியையும்‌ தருகின்றது. உழவர்‌ பெருங்குடிகளின்‌ வலியை உணர்த்தி உழவின்‌ மேன்மையை போற்றிடும்‌ வகையில்‌ சுஜாதா விஜயகுமார்‌ தயாரிப்பில்‌, தம்பி லக்ஷ்மன்‌ அவர்களின்‌ நேர்த்தியான இயக்கத்தில்‌, அன்புத்தம்பி ஜெயம்‌ ரவி அவர்கள்‌ மிகச்சிறப்பாக நடித்து உழவர்‌ திருநாளன்று வெளியாகியுள்ள 'பூமி' திரைப்படத்தைக்‌ கண்டுகளித்தேன்‌. மண்ணுக்கும்‌, மக்களுக்குமான தற்கால அரசியலை பேசும் 'பூமி' திரைப்படம்‌ மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன்‌. இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும்‌, தொழிலாளர்களுக்கும்‌ என்னுடையப்‌ பாராட்டுகளையும்‌, வாழ்த்துகளையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்" என பாராட்டியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்