கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகர், இயக்குனருமான சீமான் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"இப்பூமி அன்பாலும், இசையாலும் நிறைந்திருக்கிறது. எல்லைகள், அடையாளங்கள், வரைமுறைகள் என அனைத்தையும் கடந்து நம்மை இவ்விரண்டு ஆள்கிறது. ஆளும் அந்த இசையில், பாடும் நிலவாய் தமிழர்களின் வாழ்வில் நிறைந்தவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள். என்றும் இளமையான, இனிமையான அவரது குரலையும் மீண்டும் கேட்டு ரசித்து மகிழ ஆவலோடு காத்திருக்கிறேன். மீண்டு வருவார், நாம் கேட்டு மகிழ்வோம் என்ற பெரும் நம்பிக்கையோடு எங்கள் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நலம் பெற வாழ்த்துகிறேன். இயக்குனர் இமயம் அப்பா பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின் படி, நாளை ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் உறவுகள் அனைவரும் நம் 'பாடும் நிலா' எஸ்.பி.பி அவர்களின் இனிமையான பாடல்களை ஒலிக்கவிட்டு அவர் விரைந்து நலம்பெற்று மீண்டுவர ஒருமித்த குரலில் வாழ்த்துவோம்" என கூறியுள்ளார்.