மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது வைரலானது. அவர் பேசியது, "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்றிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் பதிவு வைரலானது. அந்தப் பதிவு, "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...
இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜ்கிரண் கருத்து குறித்து சீமான் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியது, "என்னுடைய வலி அவருக்கு இருக்கிறதா. அது பற்றி பேச தேவையில்லை. சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தை பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா என தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்க கூடாது. அவருக்கு என்னை திட்டுவதற்கோ, கோபப்படுவதற்கோ உரிமை இருக்கிறது" என்றார்.