தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட சிலர், திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளை தயாரிப்பாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) என்ற திரைக்கதை வங்கியை உருவாக்கியுள்ளனர். இதன் திரைக்கதை வங்கியையும் அதன் இணையதளத்தையும் இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்துள்ளார்.
இந்த ‘ஸ்கிரிப்டிக்’, திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை தயார் செய்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு தளம். திரைக்கதை ஆசிரியர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலம் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த முயற்சி இந்தியாவில் முதல் முறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதன் கார்க்கி கூறுகையில், "திரைப்படமாகவோ வலைத்தொடராகவோ உருவாக்கப்படும் கதைகள், வலுவானவையாகவும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும். புதிய பாதையை உருவாக்கும் இதுபோன்ற திரைக்கதைகளை வழங்க நாங்கள் தொடங்கும் கூட்டு முயற்சி ஸ்கிரிப்டிக்" என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறுகையில், "சினிமாதுறையில் சிறந்த திரைக்கதைகள் வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. திரைக்கதை நிபுணர்களின் பல்வேறு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நல்ல திரைக்கதைகளைக் கண்டுபிடிப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அத்தகைய திரைக்கதைகளைப் பெற நூற்றுக்கணக்கான கதை சுருக்கங்கள் அல்லது திரைக்கதைகளை அவர்கள் படிக்க வேண்டும். அந்த பெருமுயற்சியைக் குறைத்து, சிறந்த திரைக்கதைகளை மட்டுமே அவர்களுக்கு வழங்க நிபுணர்களின் பங்களிப்போடு ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது." என்றார். இவர்களது இந்த முயற்சிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.