இயக்குநர் ராமநாராயணா இயக்கத்தில், நாகேஷின் பேரன் கஜேஷ், சின்னத்திரை நடிகர் ராஜ்கமல், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்கூல் கேம்பஸ்'. தேவா இசையமைக்கும் இப்படத்தை இயக்குநர் ராமநாராயணாவே தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ராமநாராயணா பேசுகையில், "இது முழுக்க முழுக்க பள்ளிக் கூடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரே மொழி; ஒரே கல்வி என்பது என் கனவு. தற்போது ஒரு பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர், ஒரே படிப்பு. மதிப்பெண் மட்டும் மாணவருக்கு மாணவர் ஏன் மாறுபடுகிறது. இதில் அனைவருக்கும் ஒரே சமச்சீரான கல்வி. அதே போல் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என்று கூறினார்.
ஒரே மொழி, ஒரே கல்வி வேண்டும் என்கிறீர்கள் ஆனால் பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை என்ற கேள்விக்கு, "சாதியைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அதற்கு நிறைய அறிவு வேண்டும். எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை. என் அறிவுக்கு எட்டிய வரையில் இப்படத்தை எடுத்துள்ளேன்" என்றார்.
இதுபோன்ற படங்களால் மாற்றம் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, "எல்லாமே ஒரே நாளில் மாறிவிடாது. மாற வேண்டும் என்பதே எனது கனவு. நடக்கும் என நினைத்து எடுக்கக்கூடாது. இது என்னுடைய ஆசை. இயக்குநர் சங்கர் கூடத்தான் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜென்டில்மேன் படத்தில் பேசினார். ஊழலைப் பற்றி இந்தியன், சிவாஜி படங்களில் பேசினார். ஆனால் எல்லாம் மாறிவிடவில்லையே" என்று தெரிவித்தார்.