மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி 25 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. இதை கொண்டாடும் வகையில் இப்படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த இரண்டு சிறுவர்கள். மேலும் இவர்களுடன் இணைந்து நடித்த நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது “இந்த படத்தைப் பற்றி தமிழ் சமூகம் அதிகளவில் பேசிவிட்டது. நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது தமிழ் சினிமாவிலுள்ள சக இயக்குநர்களுக்குதான். இந்த படத்தை எப்படி புரமோஷன் செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் எல்லாம் என்னை நம்பி படத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்த படத்தின் வெற்றியும் முழுமையும் தான் என்னுடைய டீமின் பெயர் சொல்லும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு முழுமையாக கொடுக்க நான் வெறி பிடித்து அழைந்த போது என்னுடன் இருந்து பணியாற்றிய என் டீமிற்கு நன்றி. இந்த படத்தில் நடித்த கலைஞர்கள் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார்கள் என்று தெரியவில்லை, அவர்களின் பெயர் ஒரு நல்ல படத்தில் பதியப்படவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு நடித்து கொடுத்தார்கள்.
நிகிலா விமல் (டீச்சர்) படத்தின் க்ளைமேக்ஸில் ஏன் வரவில்லை என்று கேட்டார்கள். நிகிலா விமலின் கால்ஷீட் கிடைக்காததால் எடுக்க முடியவில்லை. டீச்சர் மடியில் தான் அந்த சிறுவன் படுத்திருப்பான் என்றுதான் அந்த காட்சியை முதலில் யோசித்து வைத்திருந்தேன். ஒரு வேளை அது நடந்திருந்தால் நிறைய பேர் கேட்ட மோசமான கேள்விகளுக்கு பதிலாக இருந்திருக்கும். ஆனால் அந்த காட்சியை தவறவிட்டுவிட்டேன். என் வாழ்கையில் நான் மிகவும் வருத்தப்பட்டது இந்த விஷயத்திற்குதான். நிஜ வாழ்க்கையில் அத்தனை டீச்சரும் வாழை தோப்பில் உடல்களை அடக்கம் செய்யும் வரை அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆசிரியர்கள் அவைருக்கும் நன்றி. சில காரணங்கள் அந்த காட்சிகளை படங்களில் வைக்க முடியவில்லை.
என் ஊர் மக்களுக்காகத் தான் படம் எடுக்கின்றேன். அவர்களை அங்கிருந்து வெளிய கொண்டுவரத் தான் இதெல்லாம் பண்ணுகின்றேன். அவர்கள் நான் இருக்கும் எல்லா மேடையிலும் கொண்டாடப்படுவது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். என்னுடைய எல்லா படங்களும் என் ஊரில் தான் எடுத்து வருகிறேன். அந்தளவிற்கு என் ஊரில் கதைகள் இருக்கிறது. எளிமையான உண்மை கதை, தமிழ் சமூகத்திற்கு எந்த அளவிற்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை படம் ரிலீஸாகும்போதுதான் நான் புரிந்துகொள்கிறேன். வலியதை விட எளியதுக்கு அதிகமான மதிப்பு இருப்பதை என்னுடைய அனைத்து படங்கள் மூலமாக நான் தெரிந்துகொள்கிறேன். இப்படி எளிமையான கதையை கொடுக்கும் என்னுடைய ஊர் மக்களுக்கு நன்றி” என்றார்.