மராத்தி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழில் 'பாரதி' படத்தில் சுப்ரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்பு 'பூவெல்லாம் உன் வாசம்', 'பாபா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும், 'தூள்', 'வெடி' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இதற்காக 2015 ஆம் ஆண்டு சஹ்யாத்ரி தேவ்ரையின் என்ற அமைப்பை ஏற்படுத்தி பசுமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இது அவர் தற்போது வாழ்ந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஷாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிரா சதாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயத்தில் ஒரு சில அடைப்புகள் இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நலமுடன் இருப்பதாக அவரே மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.