சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது அம்மா 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் “என் தந்தை பெரியார்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு ஆளாக இருக்கும் பெற்றோர் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையிலான பதிவு இது. கடந்த 4 வருடங்களாக என் அம்மா கோமா நோயாளியாக இருக்கிறார். அவருக்கு குழாய் மூலம் தான் உணவு அளிக்கிறோம். நாங்கள் முற்றிலுமாக உடைந்துவிட்டோம். ஆனால் மருத்துவம் மூலம் அம்மா குனமாகிவிடுவார் என்ற நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம்.
அம்மா எங்களுக்கு பழையபடி திரும்ப கிடைப்பார் என்று எங்களுக்கு தெரியும். கடந்த 4 ஆண்டுகளாக அப்பாதான் ஒற்றை ஆளாக இருந்து எங்களை கவனித்து கொள்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பாவின் அம்மா இறந்துவிட்டார். அந்த வகையில் என் அப்பாவுக்கு நானும் ஒரு தாய் போல மாறிவிட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.