நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரின் உருவப்படத்திற்கு முன் அஞ்சலி செலுத்தினர். மேலும் பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதல் கூறினர்.