லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி அருண் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வருகிற நவம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இசையமைப்பாளர் இமான் பேசுகையில், “திரையுலகில் என்னுடைய 20ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளேன். பல விஷயங்களை இந்த படம் பேசும். இதில் இடம்பெற்ற சாஞ்சிக்கவா என்கிற பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த பாடலாசிரியர் லலித் ஆனந்த் எழுதிய கடைசி பாடல் இதுதான். சசிகுமார் நிறைய படங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரொம்பவே அழகாக இருக்கிறார்” என்று கூறினார்.
நடிகர் சசிகுமார் பேசும்போது, “இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயன்றேன் அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப்பெரிய இயக்குநராக வருவார்.
ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்குப் போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை.. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்த படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். இது மக்களுக்காக எடுத்த படம்.. ஜல்லிக்கட்டு பற்றிய படம்.. அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்.. அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன்.. அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்று கூறினார்.