சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்து, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஊரடங்கை மீறுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். கரோனாவை ஒழிக்க போராடும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகர் சசிகுமார் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...
"கரோனா வைரஸ் கொடிய தொற்று. ஒன்றரை மாதமாக நம்மை வீட்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாம் அவர்களுடைய உயிரை பணயம் வைத்து நமது உயிரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கேள்விப்படும் சம்பவங்கள் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. உயிரை காப்பாற்றுபவர்களை நாம்தான் மதிக்க வேண்டும். காப்பாற்றிக் கொண்டிருப்பவர்களையும் மதிக்க வேண்டும். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மக்கள் சார்பாக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. நடக்கவும் விடக்கூடாது. நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதுதான் மனிதம். மனிதம் வளர வேண்டும்" என கூறியுள்ளார்.
#மருத்துவர்களே_கடவுள் #DoctorsAreGod pic.twitter.com/qekUxPlo4x
— M.Sasikumar (@SasikumarDir) April 20, 2020