2008-ஆம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தில் ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசை பணிகளை மேற்கொண்டிருந்தார். மதுரையில் 80-களில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கேங்ஸ்டர் படங்களின் லிஸ்டில் இருக்கிறது.
இதையடுத்து 2010 ஆம் ஆண்டு தனது இரண்டாவது படமாக 'ஈசன்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரிவெஞ்ச் ட்ராமா என்ற ஜானரில் அமைந்திருந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தையும் சசிகுமாரே தயாரிக்க ஜேம்ஸ் வசந்தன் இசையை கவனித்தார்.
இதனிடையே 2009ல் நாடோடிகள் படத்தில் நடித்திருந்த சசிகுமார், 'ஈசன்' படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. தொடர்ச்சியாக நடிகராக மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்பு பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்தார் சசிகுமார். மேலும் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், சசிகுமார் இயக்கவுள்ள புது படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சசிகுமார் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வரலாற்று பின்னணியில் உருவாவதாகவும் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படம் எடுக்க சசிகுமாரின் 'சுப்ரமணிபுரம்' படமும் ஒரு காரணம் என ஒரு பேட்டியில் கூறியிருப்பார். மேலும் அப்படத்தின் டைட்டில் கார்டில் சசிகுமாருக்கு நன்றி தெரிவித்திருப்பார். தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பின்பு சுந்தர்.சி நடிப்பில் உருவாகும் 'ஒன் டூ ஒன்' படத்தில் நடிக்கிறார்.