தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா ரவிச்சந்திரன் அண்மையில் வெளியான இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக அவரை சந்தித்தபோது, அவரின் சினிமா வாழ்க்கை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
தொடக்கத்தில் வந்த பட வாய்ப்புகள் அணுகுமுறைகள் பற்றியும், தற்போது வரும் பட வாய்ப்புகளின் அணுகுமுறையிலும் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளது என்ற கேள்வி குறித்து அவர் பதிலளிக்கையில் "மரியாதையில்தான் எல்லாம் உள்ளது, அவர்கள் மதிக்கவில்லை என்பதால்தான் நமக்கு திரைத்துறையில் நல்ல இடத்திற்குப் போக வேண்டும் என்ற வெறி வரும். அப்படிதான் அவர்கள் நம்மை புஷ் பண்ணிக் கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் இயக்குநர் அவரே வந்து அணுகாமல், ஏன் உதவியாளரை அனுப்புகிறார் என்று தோன்றும், இயக்குநருக்குப் பல வழிகளில் அழுத்தம் இருக்கும், அடுத்த காட்சி குறித்த சிந்திப்பார்கள், ஆனால் சில பெரிய இயக்குநர் அவர்களாகவே வந்து நம்மிடம் அணுகுவார்கள், அது சில இயக்குநர்களின் ஸ்டைலாக இருக்கும்
நான் முதல் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் என்னிடம் இயக்குநர் பேசவே இல்லை. நானே அவரை அழைத்து என்னுடைய சீன் எப்போது வரும், நான் இங்குதான் உட்கார்ந்திருப்பேன் என்னைத் தேடாதீர்கள் என்று சொல்லுவேன், ஆனால் நான் நடித்து முடித்தபோது படப்பிடிப்பின் இடைவேளையில் அவரே என்னிடம் வந்து சாப்டிங்களா? என்றெல்லாம் பேசினார். நம்ம வேலையைச் சரியாக செய்யும்போது அவர்களே மரியாதை தருவார்கள்" என்று கூறினார்.