தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் ராம் படம் குறித்தும் நாயகன் படம் குறித்தும் பேசிய பகுதி....
“ராம் படம் நடிக்கும்போது நானும் ஜீவா தவிர வேறு ஆர்ட்டிஸ்ட்டே இல்லை. அந்த காலக்கட்டத்தில் ஜீவாவும் நிறைய படங்களில் நடிக்காமல் குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்துக்கொண்டு ஃப்ரீயாக இருந்த கட்டம், நானும் படம் வாய்ப்புக் கிடைக்காமல் ஈ ஓட்டிக்கொண்டு இருந்த நேரம். அமீர் எங்களைக் கொண்டுபோய் ஹவுஸ் அரஸ்ட் மாதிரி கொடைக்கானலில் வைத்திருந்தார். இருபது நாட்கள்கூட அங்கேயே நாங்கள் இருந்திருக்கிறோம். கட்டு கட்டாக சின்னதாக ‘ஆராரிராரோ’ பாடலை பத்து நாட்கள் எடுத்தார். நாங்கள் எதுக்கு வந்தோம் என்றே மறந்து போய்விடுவோம், அமீர் நமாஸ் பண்ண கிளம்பிவிடுவார். நாங்கள் எங்கையாவது எதையாவது வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருப்போம். அது ஷூட்டிங் மாதிரி இல்லாமல் மிகவும் ஜாலியாக இருந்தது. கூலா டென்ஷனே இல்லாமல் இருப்போம், அமீர் வருவார் ஷாட் எடுப்பார் பிறகு அவர் போய்விடுவார். நாங்கள் எங்காவது போய்விடுவோம். அப்போது நானும் ஜீவாவும் கதை பேசியிருக்கிறோம், அந்த மாதிரி என் வாழ்க்கையில் வேறு யாரிடமும் நான் கதை பேசியதில்லை. மலை மேல் அமர்ந்துக் கொண்டு ஜீவா, தான் பிறந்ததில் இருந்து அப்போதுவரை என்ன பண்ணினார் என்பதை என்னிடம் சொல்லிவிட்டார். நான் பிறந்ததில் இருந்து அப்போதுவரை என்ன பண்ணினேன் என்பதை ஜீவாவிடம் சொல்லிவிட்டேன். பல வருட நண்பர்கள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதுபோல நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். நாங்கள் பொது இடத்தில் உட்கார்ந்துக்கொண்டு கதை பேசிக்கொண்டிருப்பதை அங்கு வரும் டூரிஸ்டுகளுக்கு கூட கவனிக்க மாட்டார்கள். அது ஒரு கோல்டன் பீரியட் என்றுதான் சொல்வேன். அதேபோல அமீர் சாருடன் எனக்கு மிகவும் நல்ல ஒரு எக்ஸ்பிரியன்ஸ். ஒரு சின்ன காட்சியாக இருந்தாலும் ரொம்பவும் மெனக்கெடல் எடுத்து இயக்குவார்.
அதுபோன்ற அனுபவம் எனக்கு நாயகன் படத்தில் மணிரத்னத்துடன் ஏற்பட்டது. கோவிலில் எனக்கு கமல் சார் தாலி கட்டும் காட்சியில் தாலி கட்டியவுடன் நான் அழுக வேண்டும் என்று மணி சொன்னார். அவர் விளையாட்டுக்குதான் சொல்கிறார் என்று முதலில் விழுந்து விழுந்து சிரித்தேன். ஆனால், நீ அழுதால்தான் நாங்கள் அடுத்த காட்சிக்கு போவோம் என்று சொல்லிவிட்டு நான் அழுவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் தான் நான் அழுதேன். அப்போது அது முதன் முறை என்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், ராம் படத்தில் நீங்க அழுவுங்க மேம் என்று அமீர் சொன்னவுடன் சிறிது நேரத்தில் செய்துவிட்டேன். அந்த நேரத்தை நாயகன் படத்துடன் ரிலேட் செய்துக்கொள்ள முடிந்தது. எனக்கும் அப்படியொரு மாற்றம் பிடித்திருந்தது” என்றார்.