மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. இப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடிக்கிறார். குக் வித் கோமாளி புகழ், ரெடின் கிங்ஸ்லி, முனீஷ்காந்த் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சந்தானம்.
அப்போது 'வாரிசு' படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்த பிரச்சனை தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சந்தானம், "அவர்கள் தான் பேசி இந்தப் பிரச்சனையை முடிப்பார்கள். நாம் இங்க இருந்து எதுவும் பேச முடியாது. அது வேறொரு மாநிலம் வேறு மொழி. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது தெலுங்கு தயாரிப்பாளர். அவர் அதற்காகப் போராடி வாரிசு படத்தை வெளியிடுவார். அதற்கான விஷயங்கள் நடக்கும். நமது மொழி தமிழ். இங்கு நமது மொழிக்கு முன்னுரிமை கொடுப்போம். அதே போல இங்கிருந்து அங்கு சென்று படம் எடுப்பவர்களுக்கு நாம் நமது ஆதரவைக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் நாம் விஜய் சாருக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிப்போம்" என்றார்.
பின்பு ஒருவர், “பொங்கல் அன்று எந்தப் படத்தை பாப்பீங்க. வாரிசு படமா? இல்ல துணிவு படமா?” என்ற கேள்வியைக் கேட்டார். உடனே சிரித்துக்கொண்டே கத்தி பட விஜய் பாணியில் கேள்வி கேட்ட நபரை அழைத்து “நீங்கள் எந்தப் படம் பார்ப்பீர்கள்?” எனக் கேள்வி கேட்டார். அந்த நபர் “இரண்டு படத்தையும் பார்ப்பேன்” எனப் பதிலளித்தார். இந்த சம்பவம் அங்கு பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'வாரிசு' இப்படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இதனால் அதிக திரையரங்குகளில் 'வாரிசு' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.