அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் 'பிகில்'. இந்தப் படத்தில் ஜாக்கி செராஃப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜய்யோ ராயப்பன், மைக்கேல் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். கால்பந்தாட்ட வீரரான மைக்கேலை மாநில அணியில் சேர்க்காமல் அவருக்குப் பதிலாக ஒருவரை சேர்த்துவிடுவார் ஜாக்கி செராஃப். இந்த விஷயம் தெரிந்த கேங்ஸ்டர் ராயப்பன், தனது மகனுக்காக கவுன்சில் தலைவராக இருக்கும் ஜாக்கி செராஃபை சந்திப்பார். அங்கு சென்று அவரிடம் முறையிடுவார். அப்போது, ராயப்பன் ஜாக்கி செராஃபின் கையை பிடித்து கோரிக்கை வைப்பார். உடனடியாக ராயப்பனின் கையை எடுக்க சொல்லிவிட்டு, ஜாக்கியின் டேபிலில் இருக்கும் சானிடைஸரை எடுத்து கையில் தடவிக்கொள்வார். அதையும் ராயப்பன் பார்த்துவிடுவார். இந்தக் காட்சியின்போது விஜய் ரசிகர்களும் கொதித்து எழுந்தனர். எளியவர்களை தொட்டால் உடனே சானிடைஸர் பயன்படுத்துவது என்பது ஆணவத்தின் வெளிப்பாடாக, வில்லத்தனத்திற்கான ஒரு சிம்பாலிஸமாக தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் இருக்கிறது.
இதே போல லாக்டவுன் சமயத்தில் வெளியான ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்திலும் பணக்கார வில்லனான தியாகராஜன், தன்னிடம் உதவி என்று கேட்டு வரும் பெண்மணி அவருடைய கையை பிடித்து மன்றாட, பின்னர் அவர் சென்ற பிறகு கையில் சானிடைஸரை போட்டுக் கொள்வார் தியாகராஜன். இவ்விரு படங்களில் மட்டுமல்ல பணக்கார வில்லன், ஆணவ மனப்பாண்மை கொண்ட வில்லன்களாக மக்களுக்குக் காட்ட இந்த சானிடைஸரை பயன்படுத்துவது ஒரு கருவியாக அல்லது டெம்பிளேட் காட்சியாக இருக்கின்றது. ஏனென்றால் வணங்குவதும் கைகொடுப்பதும் கட்டித் தழுவுவதும் அன்பின் வெளிப்பாடாக இருந்தன. அதைத் தாண்டி நமது அன்றாட வாழ்வில் ’கையை சுத்தப்படுத்த தண்ணீர் ஊற்றி கையை கழுவினால் போதும், இதுக்கு வேற ஒன்னு காசு கொடுத்து வாங்கனுமா?’ என்றுதான் மக்கள் தொகையில் பெரும்பாலானோரின் நினைப்பாக இருந்தது. இது அனைத்தையும் கரோனா மாற்றிவிட்டது. இன்று யாரை சந்தித்தாலும் வணங்க மட்டுமே செய்கிறோம். சானிடைஸர் பயன்படுத்துபவது நல்ல பண்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் படம் பார்க்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வையும் மாற்றியிருக்கிறதோ என்ற கேள்வி ‘சூரரைப் போற்று’ பார்க்கும்போது ஏற்படுகிறது.
அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ’சூரரைப் போற்று’ படத்தில் அதிகாரமிக்க ஆணவத்தில் இருக்கும் பணக்கார வில்லனை சித்தரிக்க இந்த சானிடைஸர் மெதட்டும் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் காட்டும் காலகட்டத்திற்கு அந்தக் காட்சி மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால், இந்த படம் வந்திருக்கும் கரோனா சமயம் உலகமே கைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்க சானிடைஸரை பயன்படுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பில் தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை சானிடைஸர் பயன்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் சானிடைஸருக்கான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு கருத்து கணிப்பு படி சானிடைஸர் பயன்பாடு மேலும் மேலும் அதிகரிப்பதால் இந்த சானிடைஸர் நிறுவன சந்தையில் 2026க்குள் 17 பில்லியன் டாலர்களை சம்பாதிக்குமாம். இதுவரை குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்தி வந்ததால் சானிடைஸரை அப்படி காட்சிப்படுத்த முடிந்தது. ஆனால், இன்றைக்கு பெரும்பாலானோர் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்றபோது, இனியும் பணக்கார வில்லன்களுக்கு இந்த சானிடைஸர் பயன்படுத்துவதுபோல் காட்டினால் வொர்க்கவுட் ஆகுமா?