தற்போது உள்ள தலைமுறையின் பழம்பெரும் நடிகர்களான சந்தானபாரதி, "ஜூனியர்" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கும் படம் நரை. அறிமுக இயக்குநர் 'விவி' என்கிற விவேக் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரோஹித் கதாநாயகனாக நடிக்கிறார். முற்றிலும் முதியவர்களை வைத்து நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சங்கிலி முருகன் பேசுகையில்... "அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை.
சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விஷயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று நிறைய முறை குழம்பியிருக்கிறேன். இப்படத்தில் சொல்ல வேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்திற்கும் இயக்குநர் விவிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். நரை படம் சந்தேகமேயின்றி வெற்றிபெறும்" என்று பேசினார்.