திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அவர்களுக்கு நீதி வேண்டி தனியார் அமைப்புடன் இணைந்து 7 நாட்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரினார்.
இந்த நிலையில் இணையதளம் மூலமாக தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “இன்று காலையில் ஒரு போன் வந்தது. அதில் தான் மும்பையில் இருந்து ஒரு போலீஸ் ஆபீஸர் பேசுகிறேன் என்று சொல்லியிருந்தார். அதோடு உங்கள் போன் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல் வந்துள்ளது. 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கைதாக வாய்ப்பு இருக்கிறது என்று மிரட்டினார்கள். பின்பு உங்களுடைய முழு தகவல்கள் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கா விட்டால் உங்கள் சிம் முடக்கப்பட்டு விடும் என்றார்கள்.
சிம் வாங்கும்போதே நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம், அப்போ ஏன் நம்மளுடைய விவரங்களை கேட்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டது” என்ற அவர் இதேபோல், தனது நண்பருக்கு ஒரு மோசடி நடந்ததாக விவரித்தார். பின்பு அவருடைய நண்பர் அவர்கள் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்ததாகவும் பின்பு உடனே ஃபோன் ஹேக் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தினார்.