'தமிழன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அப்துல் மஜீத் தற்போது 'டார்ச் லைட்' படத்தை இயக்கியிருக்கிறார். பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து படத்தின் நாயகி சதா பேசும்போது..."இயக்குநர் மஜீத் படத்தின் கதையை என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. இருந்தும் மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்து உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்.
படத்தில் என்னை சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே என் பதில். இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ, பெரிய பணத்துக்கோ, சந்தோஷத்துக்கோ என்று வருவதில்லை. குடும்ப வறுமை சூழலில் வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். எனக்கு இது வாழ்வில் மறக்க முடியாத படம்" என்றார்.