கேசவ பலிராம் ஹெட்கேவர், 1925ஆம் ஆண்டு நாக்பூரில் இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட, ‘ராஷ்டிரிய சுயம் சேவாக்’ சங்கத்தை நிறுவியவர். நாக்பூரில் 1889ஆம் ஆண்டு பிறந்த இவர் மருத்துவ துறையிலும் அரசியலிலும் பயணித்து வந்தார். இந்துத்துவா மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற இவர் தனது 51வது வயதில் 1940ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில் கே.பி.ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இப்படம் இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சஞ்சய்ராஜ் கௌரிநந்தன் இயக்க பத்ம ஸ்ரீ விருது பெற்ற அனுப் ஜலோட்டா நடிக்கிறார். மேலும் ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல். நித்தேஷ் குமார் மற்றும் ஜெயானந்த் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் பற்றி ஜெயானந்த் ஷெட்டி கூறுகையில், "எங்கள் திரைப்படம் ஹெட்கேவரின் வாழ்க்கை பயணம், அவரது போராட்டங்கள் மற்றும் அவரது இயக்கங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமையும். ஆர்எஸ்எஸ் இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்புகளில் ஒன்றாக உள்ளது என்பதன் மூலம் அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் திறன் நிறுவப்பட்டுள்ளது'' என்றார்.
இப்படம் பற்றி அனுப் ஜலோட்டா கூறுகையில், "படத்துடன் இணைந்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார்.