கடந்த 2018ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்திலுள்ள ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாள் முதலே பல மில்லியன் பார்வையாளர்கள் கண்டு சாதனை படைத்தது. தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோ என்று சாதனை படைக்க, அதனை தொடர்ந்து 500 மில்லியன் பேர் பார்வையாளர்களை கடந்தது.
இந்த பாடல் யூ-ட்யூபில் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது 100 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இந்திய திரைப்படங்களில் பஞ்சாப் மொழி பாடல் ஒன்றுதான் 100 கோடி பேர் பார்த்து ரசித்தனர். அதன்பின் ஒன்றிரண்டு இந்தி பாடல்கள் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற வரிசையில் 'ரௌடி பேபி' 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 1.3 பில்லியன் பார்வைகளுடன் 'ஹனுமான் சாலிசா' என்ற பக்திப்பாடல் உள்ளது. இரண்டாவது இடத்தில் பஞ்சாபி சினிமா பாடலான 'லாங் லாச்சி' டைட்டில் பாடலான 'லாங் லாச்சி' பாடல் 1.2 பில்லியனுடன் உள்ளது. இந்தப் பாடல்களையும் விரைவில் பின்னுக்குத் தள்ளி 'ரௌடி பேபி' முதலிடத்தைப் பிடிக்கும் என அந்தப் பாடலின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.