கடந்த ஆண்டு வெளியான காந்தாரா படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. இப்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை முதல் பாகத்தின் முந்தைய கதையாக உருவாவதால் ‘கந்தாரா தி லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுக்காவில் உள்ள அவரது சொந்த ஊரான கீரடியில், அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார். இப்பள்ளியில் 30 வருடங்களுக்கு முன்னால் தான் படித்ததாக நினைவுகூர்ந்தார். மேலும் அவர் படிக்கும்போது 400 குழந்தைகள் இருந்ததாகவும், தற்போது 77 குழந்தைகள் தான் இருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக விளையாட்டு மைதானத்தை சரி செய்வது, சுற்றுச்சுவர் கட்டுவது, பள்ளிக் கட்டடத்திற்கு பெயிண்ட் அடிப்பது, வேன் வாங்குவது மற்றும் கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது என அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். இதைக் கடந்த ஆண்டு ஆரம்பித்த தனது அறக்கட்டளையின் மூலம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘சர்காரி ஹி’ என்கிற படம் கன்னட பள்ளிகளின் அவல நிலை குறித்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.