இளம் திறமையாளர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக Noise and Grains, இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கிவருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ ஜே.பி இயக்க, எஸ். மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில் சின்னத்திரைப்பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நடன இயக்குநர் சாண்டி இப்பாடலை வெளியிட்டார்.
விழாவில் நடிகர் ரியோ பேசுகையில், "என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains மிக அழகாக வெளியிட்டுவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம்தான்; இன்னும் நிறைய செய்வார்கள்.அனைவரும் பாடலை பார்த்து ரசியுங்கள்" எனக் கூறினார்.
இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், "ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்னபோது அவன் வேண்டாம் என்றான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு அது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் எஸ். மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.
ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள இப்பாடல், யூடியூப் தளத்தில் நான்கு லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.