தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் க்யூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இப்படத்தில் 'இன்மை' பகுதியில் பிரபல நடிகர் சித்தார்த்தை நாயகனாக வைத்து படம் இயக்கிய ரதீந்திரன் ஆர் பிரசாத் படம் குறித்து கூறுகையில், "'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தில் பய உணர்வை வெளிப்படுத்தும் கதையில் நான் பணியாற்றியுள்ளேன். பயம் மட்டுமே அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான பண்பு. நீருக்கடியில் வாழும் உயிரினம் உட்பட, உலகின் அனைத்து உயிரினத்திற்கும் பயம் என்பது அடிப்படை உணர்வு. இந்த உணர்வை திரையில் காட்ட வழக்கமான ஹாரர் அல்லது திரில்லர் கதை கண்டிப்பாக வேண்டாம் என முடிவு செய்தோம். எதிர்பாரா நிகழ்வினால் உருவாகும் சோகமும் அதன் விளைவாக உருவாகும் பயத்தையும் கதையில் கொண்டு வந்தோம். நடிகர் சித்தார்த் அவர்களுடன் இக்கதை குறித்து விவாதித்த பொழுது எனக்கும் அவருக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகியவற்றின் மீது பொது விருப்பம் இருந்ததை அறிந்தோம். எனது விருப்பமானது 'கிங் லீர்' அல்லது 'ஹேம்லட்' போன்ற கதையை எழுத வேண்டும். 'ஒதெல்லோ' அல்லது 'மெக்பெத்' போன்ற படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான். இறுதியில், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை சொல்லும் கதையைச் சொல்ல முடிவு செய்தோம். இது இன்மை பகுதியில் அழகாக வந்துள்ளது" எனக் கூறினார்.