இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
இந்த நிலையில், ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ பட இயக்குநர் ரவிக்குமார் தற்போது கரோனா தொற்றிலுருந்து விடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன். இருந்தும் கரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது.
அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம். நோய் தொற்று ஆரம்பித்த ஏழு நாட்கள் மிக முக்கியமான நாட்கள், அதற்குள் மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம். காலதாமதம் செய்வதும் 'எனக்கு வராது. அதெல்லாம் ஒன்னும் இல்லை, டெஸ்ட் பண்ணுனா கரோனான்னு சொல்லிடுவாங்க' இப்படியாக அலட்சியமாக பரிசோதனையைத் தள்ளிப்போடுவதும் நோய் உடலுக்குள் வீரியமடையவே உதவிசெய்யும். மிகுந்த விழிப்புணர்வோடு, நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும்.
நோய்த் தொற்றுக்கு ஆளான பிறகு ஃபேஸ்புக் மற்றும் செய்திகள் வாயிலாக இறந்தவர்கள் பற்றிய நியூஸ் கேட்க கேட்க மனப்பதற்றம் ஏற்படுகிறது. துளியும் தூக்கம் வரவில்லை. அதுவும் நம் மனநிலைமையைப் பாதிக்கிறது. நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு நியூஸ் பார்க்காமல் இருப்பது நல்லது. உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் நிறைய தொற்று ஏற்பட்டுள்ளது. அன்பானவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தாமதம் செய்யாமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். மீண்டு வருவோம்” என பதிவிட்டுள்ளார்.