'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆயுத எழுத்து', '7ஆம் அறிவு' உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் ரவி கே சந்திரன். தமிழைத் தாண்டி இந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஜீவா நடிப்பில் வெளியான 'யான்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸில் (ட்விட்டர்) சென்னை விமான நிலையம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை விமான நிலையத்தில் பைகளை கையாளும் சேவை எப்போதும் மிக மோசமாக உள்ளது. பைகள் தாமதமாக வருகிறது. பதிலளிக்க சுற்றி யாருமே இல்லை.. கடந்த 49 ஆண்டுகால பயணத்தில் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஆர்பிஎப்’ (CRPF) அதிகாரிகள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து நடிகை சனம் ஷெட்டி, கோவை விமான நிலையத்தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகரும் கலை இயக்குநருமான கிரண் விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ரவி கே சந்திரனும் புகார் தெரிவித்துள்ளார்.
Chennai airport baggage handling service is ALWAYS by far the worst experience I have ever had in my 49 years of travelling . Baggage’s come late .. and no one ever around to answer @ChennaiAirport @ThaiAirways— ravi k. chandran (@dop007) August 22, 2023