Skip to main content

”பழைய 'விக்ரம்’ படத்தின் தொடர்ச்சி இருக்காது; அதே சமயம்...” - ’விக்ரம்’ படத்தின் ரகசியம் உடைத்த ரத்னகுமார்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

 Rathna Kumar

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் கதை, வசனத்தில் பங்களித்துள்ள இயக்குநர் ரத்னகுமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விக்ரம் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

வித்தியாசமாக பண்ணலாம் என்று நினைத்து நிறைய புதுப்புது விஷயங்களை முயற்சி செய்திருக்கிறோம். அடுத்த பல படங்களுக்கு தொடக்கமாக இருக்கும் வகையில் லோகேஷ் செய்த சில விஷயங்கள் படத்தில் உள்ளன. படம் பற்றி இப்போது உள்ள கணிப்புகளைத் தாண்டி ரசிக்க வைக்கும்படியான விஷயங்கள் படத்தில் உள்ளன. முந்தைய விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. அதேநேரத்தில், இந்தப் படம் இதோடு முடியாமல் எப்படி வேண்டுமானாலும் அடுத்து தொடர்வதற்கான விஷயங்கள் படத்தில் உள்ளன. 

 

கதை எழுதும்போது இந்த நடிகர் இருக்கிறார், அந்த நடிகர் இருக்கிறார் என்றெல்லாம் நம்மை கட்டுப்படுத்தி எழுதமுடியாது. கதை யாரை கேட்கிறதோ, அந்த நடிகரைத்தான் நடிக்கவைக்க வேண்டும். அப்படித்தான் இந்தப் படம் நடந்தது. இதுவரை பார்த்த படங்களில் இருந்ததுபோல விஜய்சேதுபதியின் பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி இருக்காது. நான் படம் பார்த்தபோது எந்த இடத்திலும் விஜய்சேதுபதி தெரியவேயில்லை. இனி அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் அந்த மாற்றத்தை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

 

ஒவ்வொருமுறை ஆக்‌ஷன் சொன்னதும் பகத் ஃபாசில் சாரை பார்த்தால் நமக்கு பக்குனு இருக்கும். ரொம்பவும் கேஷுவலா பேசிக்கிட்டு இருப்பார். ஆக்‌ஷன் சொன்னதும் அப்படியே மாறிவிடுவார். படத்தில் சூர்யா சார் நடிக்க இருக்கும் விஷயத்தை ஷூட் இறுதிகட்டத்தை நெருங்கிய சமயத்தில்தான் எனக்கே லோகேஷ் சொன்னார். அது ரொம்பவும் சர்ப்ரைஸாக இருந்தது. சூர்யா சார் காட்சிகள் எல்லாமே பயங்கரமாக வந்துள்ளது. 

 

கமல் சாரை எப்போது பார்த்தாலும் அதே வியப்பு உள்ளது. எல்லோருமே ஒரு கட்டத்தில் களைப்படைந்துவிடுவார்கள். ஆனால், கமல் சார் அப்படியில்லை. நாமே போதும் என்று நினைத்தால்கூட அவர் விடமாட்டார்.எவ்வளவு விமர்சனம் வந்தாலும் கமல் சார் துவண்டுவிடமாட்டார். எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்த விஷயமும் அதுதான். 

 

 

சார்ந்த செய்திகள்