பத்மாவத், சிம்பா, கல்லி பாய் என தொடர் வெற்றிகளை பெற்ற நடிகர் ரன்வீர் சிங். தற்போது ‘83’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இது 1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை பற்றி உருவாகும் படம் ஆகும்.
![ranveer singh](http://image.nakkheeran.in/cdn/farfuture/TUtV_BuNvJPwS7R_6otT_XhZlQeNiLdWmq9TtCuOC-g/1562389031/sites/default/files/inline-images/ranveer%20singh%20look.jpg)
அப்போது இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்ட கபில்தேவின் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ஏற்று இதில் நடிக்கிறார். மற்ற வீரர்களின் கதாபாத்திரத்தை ஏற்று பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தை தமிழக நடிகர் ஜீவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் தேவின் மனைவி ரோமி பாடியா கதாபாத்திரத்தை ரன்வீர் சிங்கின் மனைவியான தீபிகா படுகோன் தான் நடிக்கிறார். பஜ்ரங்கி பைஜான் என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய கபீர் கான் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் அவருடைய கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. கிட்டத்தட்ட கபில் தேவ் தோற்றத்தை ரன்வீர் சிங் பெற்றிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டுக்கிறார்கள்.