பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இறுதி ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை போலவே இதிலும் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமில் உள்ளதைப் போல் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 16 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். மேலும் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி க்ரீத்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், க்ரீத்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குநர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.
இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தெலுங்கானாவில் இப்படத்துக்கு 10,000 டிக்கெட் இலவசமாக வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இப்படத்தை காண்பித்து உதவ 10,000 டிக்கெட்டுகளை புக் செய்துள்ளார். இதே ராமாயணம் கதையில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.