முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே வெளியானது. பின்பு இப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாகவும் கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.
சமீபத்தில் கங்குலி பயோ பிக்கில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரன்பீர் கபூர். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "கங்குலி ஒரு லெஜண்ட். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரன்பீர் கபூர் சமீபத்தில் கொல்கத்தா சென்று கங்குலியை சந்தித்து கிரிக்கெட் விளையாடினார். இது குறித்து ரன்பீர் கபூர் கூறுகையில், "அவருடன் கிரிக்கெட் விளையாடினது ஒரு கனவு நனவான தருணம். அவர் எனக்கு 10 பந்துகளை வீசினார். அவருடன் விளையாடுவது ஒவ்வொரு குழந்தையின் கனவாகும். இந்த தருணத்தை மிகவும் ரசித்தேன்” என்றார்.