ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்றது. அதுபோல 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்ற வேட்பாளர் கோடலி நானி, சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் தெலுங்கு தேசம் கட்சியை காப்பாற்ற ஜூனியர் என்.டி.ஆரால் மட்டும்தான் முடியும் என்றார்.
இந்நிலையில் இதே கருத்தை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் தெரிவித்துள்ளார். என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் லக்ஷ்மி என்.டி.ஆர். இதில் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவியின் பார்வையில் படம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்திருந்தார். சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோதே இந்த படம் வெளியாகுவதற்கு பல சிரமங்கள்பட்டு பின்னர் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது. இன்று மீண்டும் இப்படம் மறு வெளியீடு ஆந்திராவில் செய்யப்படுகிறது.
இந்நிலையில், “ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்தினால், மக்கள் அந்தக் கட்சியின் மோசமான தோல்வியை உடனடியாக மறந்துவிடுவார்கள். என்.டி.ஆரின் பேரனால் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற முடியும். அவரது தாத்தாவின் மீது அவருக்கு ஏதாவது மரியாதை இருக்குமென்றால், அவர் உடனடியாக தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற வேண்டும். ஒரு என்.டி.ஆர் ரசிகனாக, உங்கள் தாத்தாவின் முதுகில் குத்தியவருடன் நீங்கள் இணையக்கூடாது என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.