
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் கைவசம் மூன்று படங்கள் வைத்துள்ளார். இதில் நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே, மற்றும் கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத இரண்டு படங்கள் என மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஜய் தேவ்கனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை ரகுல் தன் தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்தது பற்றி சமீபத்தில் பேசியபோது..."சினிமாவில் வெற்றி கொடுப்பது முக்கியம். தோல்வி படங்களில் நடித்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. சினிமாவில் வெற்ற, தோல்விகள் யார் கையிலும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் கஷ்டப்பட்டு எடுக்கிறோம். ஆனாலும் சில படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனால் வெற்றி, தோல்விக்கான காரணம் யாருக்கும் தெரிவது இல்லை. இதற்காக சினிமாவில் உழைத்தவர்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. யாரும் தோல்வி படம் எடுக்க நினைப்பது இல்லை. நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிற படங்கள் தோல்வி அடைவதும், ஓடாது என்று நினைக்கிற படங்கள் வெற்றி பெறுவதும் இங்கு நடக்கின்றன. வெற்றி, தோல்வியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட படங்களை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நான் தோல்வி படம் கொடுத்த இயக்குனர்களை ஒதுக்குவது இல்லை" என்றார்.