கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்களுக்குத் தணிக்கை போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு அப்படியில்லாமல், நாம் நினைத்ததைப் படமாக்கி வெளியிட முடியும். இதனாலேயே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.
அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்குப் பிரபலங்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துவருகின்ற நிலையில், இப்படம் குறித்து சூர்யாவின் ‘என்.ஜி.கே’ பட நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "‘தி ஃபேமிலி மேன்-2’ தொடர் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நடித்துள்ள அனைவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தொடரில் மனோஜ் பாஜ்பாய் எத்தகைய நடிப்பை வழங்கியிருந்தார் என்பதைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. சமந்தாவுக்கு தலைவணங்குகிறேன். நீங்கள் ஒரு நெருப்புப் பெண். ராஜி கதாபாத்திரத்தை நீங்கள் அட்டகாசமான வகையில் ஏற்று நடித்திருக்கிறீர்கள். என்னைப் போலவே என் குடும்பமும் உங்கள் ரசிகர்களாகிவிட்டார்கள்" என கூறியுள்ளார்.