Skip to main content

“அவர் உயிரோடு இருந்திருந்தால் தேடி சென்று காலில் விழுந்திருப்பேன்” - ரஜினி நெகிழ்ச்சி

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

rajinikanth talk about kalki ponniyin selvan

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினி பேசுகையில், "நான் புத்தகம் நிறைய படிப்பேன். ஆனா 300 பக்கங்களுக்கு மேல இருந்தால், படிக்கவே மாட்டேன். எல்லாரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தீர்களா என்று கேட்டார்கள். நிறைய பக்கம் இருந்தால் படிக்க மாட்டேன். பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும் என குமுதம் அரசு கேள்வி பதில் ஒன்றில், ஜெயலலிதாவிடம்  ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு,  'ரஜினிகாந்த்' என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார்,  அடடா, எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்று தான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன். இந்த கதையில், நந்தினி தான் எல்லாமே. பொன்னியின் செல்வி என இதற்கு பெயர் வைத்து இருக்க வேண்டும். இதை வைத்து தான், படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம்.


இந்த படத்தை முன்பே மணி பிளான் பண்ணும் போது, நான் இந்த பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். அவர் ஒப்பு கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சீங்ன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை. வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அது தான் மணிரத்னம்.

 

பழு வேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும் போது எனக்கு தோன்றியது. பொன்னியின் செல்வனில் 40வது அத்தியாயத்தில் தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்த படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணி ரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்