கர்நாடக மாநிலம் தனி மாநிலமாக உதயமாகி 67-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கிறது. இந்த விழாவைக் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலத் தலைமைச் செயலகத்தில் இன்று (01/11/2022) மாலை 04.00 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கர்நாடக அரசின் மிக உயரிய விருதான 'கர்நாடக ரத்னா’ விருது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சமூக சேவை மற்றும் கலைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்ததற்காக, அவருக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (01/11/2022) மதியம் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். அங்கு அவருக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு 'கர்நாடக ரத்னா’ விருது வழங்கிக் கௌரவிக்கிறார். ரஜினிகாந்த் வருகையையொட்டி, அவரது ரசிகர்களும், புனித் ராஜ்குமார் ரசிகர்களும் விழா நடைபெறவுள்ள பகுதியில் குவிந்துள்ளனர்.
மிக இளம் வயதில் கர்நாடக அரசின் மிக உயரிய விருதான 'கர்நாடக ரத்னா’ விருது புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.