இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு, பின்பு நிலவுக்கு மிக அருகில் சென்று தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இஸ்ரோவின் இந்த வரலாற்றுச் சாதனையை அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த், "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை பதித்துள்ளது. இஸ்ரோ அணிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன, "செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து செல்வது முதல் நிலவில் இறங்குவது வரை - என்ன ஒரு பயணம். இஸ்ரோ அணி தேசத்தின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
சூர்யா, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தென் துருவச் சந்திரயான் 3 தரையிறக்கத்தில், உங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடுவதில் எங்கள் அனைவரையும் ஒற்றுமையாக உணரச் செய்ததற்காக நன்றி" என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஜி.வி பிரகாஷ், "விண்ணிலும் சாதனை படைத்தது எனது இந்தியா. வீர முத்துவேலருக்கும் சக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் , நன்றிகளும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.